Tuesday 28 February 2017

சோன்பப்டி ரெசிபி

சோன்பப்டி
-----------

சோன்பப்டி செய்ய முதலில் மாவு சேர்த்திய கலவையை தயார்செய்ய வேண்டும், அடுத்து சர்க்கரை பாகு தயாரிக்கவேண்டும், இரண்டும் கலக்கும் பதமும் முக்கியம், இதெல்லாம் கவனத்தில் கொண்டு செய்தால் லேயர் லேயரான வாயில் கரையும் சோன்பப்டி நிச்சயம். அல்லது அதற்கு முந்தைய நிலையான பட்டிஷா வரும். எனவே பொருட்கள் வீணாகாது.

என்ன தேவை

பாகு, மாவு கலவை செய்வதற்கு முன் இவற்றை தயாராக வைக்கவும்

1. எண்ணெய் பூசிய நான் ஸ்டிக் பாத்திரம்
2. அகலமான பேசின் அல்லது சப்பாத்தி கல் அல்லது சமையல் மேடையை பயன்படுத்துவதும் நன்று. இது சர்க்கரை பாகை இழுக்க தேவைப்படும்
3. நெய் தடவிய ட்ரேயில் பொடித்த பாதாம் பிஸ்தா கலவைகளை பரவலாக தூவி தயாராக வைக்கவும்.

மாவு கலவைக்கு

கடலைமாவு : ஒரு கப்
மைதா ஒரு கப்
நெய் ஒன்றரை முதல் இரண்டு கப்

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை  - இரண்டு கப்
லிக்விட் க்ளுகோஸ் : கால் கப்
தண்ணீர் : ஒரு கப்

பொடித்த பாதாம் பிஸ்தா விருப்பத்திற்கேற்ப

எப்படி செய்வது

அடிகனமான அகன்ற பாத்திரத்தில் நெய் விட்டு லேசான தீயில் உருக்கவும். அதில் கடலைமாவு, மைதாவை கொட்டி நன்கு கலந்து விடவும். பேஸ்ட் போன்ற வடிவத்தில் சிறு சிறு குமிழ்கள் வரும் போது அடுப்பை அணைக்கவும். கலவையை ஆறவிடவும்

சர்க்கரை பாகு

சர்க்கரை, லிக்விட் க்ளுகோஸ், தண்ணீர் மூன்றும் சேர்ந்து கலந்து சர்க்கரையை பெரும்பான்மையை கரைக்கவும்
பிறகு அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்
மெத்தன்ற உருண்டை பதம் வந்ததும் அடுப்பிலிருந்து அகற்றவும். அகற்றியதும் எண்ணெய் பூசிய நான் ஸ்டிக் கடாயில் பாகை மாற்றவும்.
மாற்றிய பாகை கைவிடாமல் கிளறி ஆறவைக்கவும்

இந்த இடத்தில் இரண்டு வகையாக சோன்பப்டி செய்யலாம்.

முதல் வகை :

மாவு கலவை உள்ள பாத்திரத்தில் பாகை நேரடியாக கொட்டி இரண்டு கரண்டிகளால் மடிப்பது. கிளறக்கூடாது. கேக் செய்ய போல்டிங் செய்வது போல் மடிக்கவேண்டும். பொறுமையாக செய்தால் நூல் போன்ற வடிவம் வரும், அதனை பாதாம் பிஸ்தா கொட்டிய பாத்திரத்தில் கொட்டி தடவி லேசாக ஆறவிட்டு துண்டு போடலாம்.

இரண்டாம் வகை

நான் ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள பாகை ஒரு சமையல் மேடை/சப்பாத்தி கல்லில் போட்டு கை பொறுக்கும் சூட்டில் இழுக்க வேண்டும். படத்தில் காட்டியபடி மாற்றி மாற்றி மாவை தடவி இழுத்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நூல் போன்று வரும். இப்போது அதனை ட்ரேயில் அடுக்கி மெல்ல தட்டி ஆறவிட்டு துண்டு போடலாம்

குறிப்பு

சர்க்கரை பாகில் லிக்விட் க்ளுகோஸ் அவசியம், இல்லாவிட்டாலும் பாகு பதத்தை இன்னும் கொஞ்சம் முற்றிய உருண்டை பததில் வைக்கலாம்
முதல் வகையில் பெரிய லேயர்கள் அதிகம் வராது, பட்டிஷாவிற்கு மிக சரியான முறை அதுவே

வாயில் கரையில் பஞ்சு போன்ற சோன்பப்டிக்கு இரண்டாம் முறை சிறந்தது. எத்தனை அழுத்தம் கொடுத்து இழுக்கிறோமோ அத்தனை லேயர்கள் வரும்
கவனமாக கையாள வேண்டியது பாகு. தீப்புண்களை விட மூன்று மடங்கு ஆபத்தானது சர்க்கரை பாகினால் ஏற்படும் புண்கள். எனவே மிக கவனமாக, கை பொறுக்கும் சூடு வரை காத்திருந்து செய்யவும்.

நான் ஸ்டிக் பாத்திரத்தில் மாற்றும் பாகை கிளறிவிடவேண்டும், அல்லது மேற்புறம் ஆறியும் கீழே க்ரிஸ்டல் வடிவமும் மாறிவிடும். சீரான கிளறிவிடுதல் மிக அவசியம்

நெய் அல்லது நெய் டால்டா சேர்த்தும் செய்யலாம். நிறைய நெய் சேர்த்தால் இறுதியில் வடிவம் சரியாக வராது,  மாவு அளவில் 1:2 என்று வைத்துகொள்ளவும், அதாவது ஒரு கப் மாவிற்கு இரண்டு கப் நெய், அதில் முதலில் ஒன்றரை கப் ஊற்றி மாவை கலக்கவும், தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

இந்த மாவில் சிறிது பால் சேர்த்து,  கிளறிகொண்டே இருந்தால் ஒட்டாமல் வரும் பதத்தில் எடுத்து துண்டு போட்டால் அதுவே சோன் ஹல்வா.
கடலைமாவு மட்டும் சேர்த்து செய்தால் அதுவும் பட்டிஷா

Friday 17 February 2017

ஜானகி vs ஜெயலலிதா


கடைசியாக கடந்த 1989-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டது. அதிக உறு‌ப்பினர்களின் ஆதரவுடன் ஜானகி முதலமைச்சர் ஆனார். இதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி சட்டப்பேரவையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

அதிமுகவின் 1‌30 உறுப்பினர்களில் 97 பேர் ஜானகி அணிக்கும் 33 பேர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக இருந்தனர். பரபரப்பான சூழலில் வாக்கெடுப்பு தொடங்கியது. ஜெயலலிதா அணியில் 33 பேர் ஜானகி‌க்கு எதிராக வாக்களித்த நிலையில் அவர்கள் வாக்குகளை செல்லாதது ஆக்கி பதவி நீக்குவதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார். வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றிபெற்றதாக அவர் அறிவித்தார்.

இதையடுத்து சட்டப்பேரவைக்குள் வன்முறை மூண்டது. காகிதங்களும் மைக்குகளும் மாறிமாறி பறந்தன. இதில் சில உறுப்பினர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது.