Sunday 25 June 2017

MBBS 85% இடஒதுக்கீடு யாருக்கானது?

MBBS 85% இடஒதுக்கீடு யாருக்கானது?
----------------------------

மருத்துவ படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடும் CBSE பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உண்மையில் இந்த 85% இடஒதுக்கீடு யாருக்கானது? இதனால் பயனடையப் போகிறவர்கள் யார்?

தமிழகத்தில் MBBS சேரும் மாணவர்களில் எண்ணிக்கை அளவில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களைவிட  தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள்தான் அதிகம். அரசு பள்ளிகளில் படித்து MBBS படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மொத்த மருத்துவ இடங்களில் வருடத்திற்கு 2% மாணவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளிலிருந்து MBBS சேருகிறார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகிறது. அப்படியானால் இந்த 85% இடஒதுக்கீட்டால் அதிகம் பலனடையப்போவது மாநிலபாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான். அவர்களும் நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியானால் CBSE பள்ளிகளில் பயில்வது மட்டும் நம் மாநில பிள்ளைகள் இல்லையா?

உண்மையைச் சொல்லப்போனால் NEET அறிவிப்பிற்குபிறகு பெற்றோர்களின் தேர்வு CBSE ஆக மாறிபோனதில் மிகவும் பாதிக்கப்பட்டது தனியார் State board syllabus பின்பற்றும் பள்ளிகள்தான். ஏற்கனவே சமச்சீர் கல்வியால் அரசுப்பள்ளிகளில் இருந்து தங்களை தனித்து காட்ட முடியாத நிலையில் NEETல் CBSE பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது. இதனால் கடந்த 2/3 வருடங்களில் அவர்களின் மாணவர் சேர்க்கை குறைந்து போனது. இப்போது அந்த நிலையை சரிசெய்ய கிடைத்த வாய்ப்பாக இந்த 85% இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ளும். இந்த இடஒதுக்கீட்டின் மூலம் "எங்கள் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது" என்று  விளம்பரப்படுத்தி தங்களுடைய மாணவர் சேர்க்கையையும் வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ள வழிவகுக்கும்.

மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 85%-15% இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. அப்படியானால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைவிட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் எண்ணிக்கை அளவில் அதிகம். எனவே இந்த அரசு உண்மையில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினால் "அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 80%மும் தனியார் பள்ளிகளுக்கு 20%மும் கொடுத்திருக்க வேண்டும்."
அவ்வாறு வழங்காமல் "மாநில பாடத்திட்டம்" என்ற வகையில் இடஒதுக்கீடு வழங்குவது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அரசு எடுத்துள்ள முடிவு என்றே உறுதியாக தெரிகிறது. அவ்வாறு அரசுபள்ளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் இப்போது இந்த 85%-15% இடஒதுக்கீடு முறையை ஆதரிக்கும் தனியார் பள்ளிகள் அப்போது மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று மாற்றிச்செல்லும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

இந்த பிரச்சனையை அரசு "CBSE பாடத்திட்டம் vs மாநில பாடத்திட்டம் " என்று கையாள்வதைவிட "அரசு பள்ளிகள் vs தனியார் பள்ளிகள் " என்று கையாளுவதே சரியாக இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏழை மாணவர்களில் யாரேனும் ஒரு சில மாணவர்களுக்கு கிடைத்த MBBSவாய்ப்பு,  NEET தேர்வுக்கு பிறகு கேள்விக்குறியான சூழலில்  அந்த எட்டாக்கனியான  மருத்துவ படிப்பு  ஏழை மாணவர்களுக்கு உண்மையில் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் அரசுபள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 80%இடஒதுக்கீடு வழங்குவதன் மூலமே சாத்தியமாகும்.

அப்படி ஒரு வேளை அரசு அறிவிக்குமானால் தனியார் பள்ளிகளின் பகையை அரசு சந்திக்க நேரிடும். CBSE பாடத்திட்டத்தை பின்பற்றினாலும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றினாலும் தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகள்தான். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மாநில பாடத்திட்டத்திற்கு 85% இடஒதுக்கீடு என்றவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவர்கள் சற்றே சிந்தித்து இது State board syllabus தனியார் பள்ளிகளுக்காக அரசு எடுத்துள்ள முடிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குரிய இடஒதுக்கீடு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும்!

மேலும் அரசு செய்ய வேண்டிய முக்கியமான பணிகள்
*NEET தேர்விலிருந்து விலக்கு
*+2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை
முடியாதபட்சத்தில்,
*மாநிலபாடத்திட்டத்திலிருந்து வினாத்தாள் தயாரித்தல்
*இந்த வருடம் போல் தமிழ் மொழியில் வினாத்தாள் இருத்தல்
*தனியார் மருத்துவகல்லூரிகளுக்கு  தேர்வை கட்டாயமாக்குதல்.

அரசு செய்யுமா? அரசுப்பள்ளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குமா?

நண்பன் ஸ்ரீஜி 

No comments:

Post a Comment