Monday, 26 December 2016

All pass அவசியமா? -பதிவு 2

All pass அவசியமா?-பதிவு2
-------------------------
பெண்கல்வியின் நிலை என்னவாகும்?

பெண்களுக்கு கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு தற்போது பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகக்குடும்பச்சூழலில் பரவலாக ஆண், பெண் பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவது பெற்றோர்களிடம் காணப்பட்டாலும் குறைந்தது பள்ளிக்கல்வியை மட்டுமாவது பெண்பிள்ளைகள் முடித்துவிடட்டும் என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.
'பத்தாவது மட்டுமாவது படிச்சிடட்டும்', '+2 பாஸ் பண்ணா போதும் ' என்பதைத் தாண்டி தற்போதுதான் 'பொண்ணு ஒரு டிகிரி முடிச்சிரட்டும் அப்புறம் கல்யாணத்தை வைச்சுக்கலாம்' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வும் ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை.

குழந்தை திருமணத்தடைச் சட்டம், 18வயது நிறைவடைந்த பின்பே திருமணம், 14வயது வரை கட்டாயக்கல்வி சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்கள் வாயிலாகவும், மாணவிகள் ஊக்கத்தொகை, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வாயிலாகவும் பெண்கல்வியின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் இப்போது 5ம் வகுப்புக்கு பிறகு தேர்ச்சி கட்டாயமில்லை என்றானால் கல்வியில் பின்தங்கிய மாணவிகள் 6, 7, 8 வகுப்புகளிலேயே 2, 3 வருடங்கள் தோல்வி அடைந்தால் அம்மாணவிகளின் நிலை என்னவாகும்? இவளுக்கு படிப்பே வர லை! எனத்தூற்றும் அவளுடைய பெற்றோரையும் வீட்டினரையும் அம்மாணவி எப்படி எதிர்கொள்வாள்?  பத்தாவது முடிக்கும் முன்பே அவளுக்கு 18 வயதாகிவிட்டால் பெற்றோர்கள் தொடர்ந்து படிக்க வைக்க நினைப்பார்களா? அல்லது திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்று நினைப்பார்களா?  தற்போதைய நிலையில் 8ம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி என்பதால் 15வயதில்  10ம் வகுப்பை எட்டிவிடுகிறார்கள். பொதுத்தேர்வைக் கடந்து விட்டால் +2 என்பது கைக்கெட்டிய தூரம்தான். எனவே பழைய நிலையைத் தொடர்வதே பெண்கல்விக்கு சிறந்த வழி!

பல நூற்றாண்டு பெண்ணடிமைத்தனத்தை மீறி பலகட்ட  போராட்டங்களுக்குப் பிறகு பள்ளிகளின் படிகளைத்தாண்டி கல்லூரிகளின் வாசலில் கால்வைக்கத் தொடங்கியிருக்கும் பெண்களுக்கான வாசலை அடைக்கும் சட்டம் இது. எப்படியாவது ஆண்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும்போதும், குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்படும்போதும் அதற்காக முதலில் பலிகடா ஆக்குவது அக்குடும்பப்பெண்பிள்ளைகளின் கல்வியைத்தான். அனைத்து  குடும்பங்களிலும் குறிப்பாக சில மதம் மற்றும் சாதிப்பிரிவுகளிலும் இன்றளவும் பெண்குழந்தைகளின் படிப்பைவிட திருமணம்தான் முக்கியம் என்ற நிலை நிலவுவதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில் மேலும் பெண்குழந்தைகளை பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடும் சூழ்நிலையைத்தான் இந்த 5ம் வகுப்பு வரை மட்டும் தேர்ச்சி சட்டம் உருவாக்கும். பெண்கல்வியைப் பாதுகாக்க தற்போது உள்ள 8ம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி சட்டமே தொடர வேண்டும். பெண்கல்வி அவசியமென்று விரும்புபவர்கள் நிச்சயம் இச்சட்டதிருத்தத்தை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் பள்ளி&கல்லூரிக்கல்வியில் பெண்களின் நிலை கேள்விக்குள்ளாகும்?

முழுமையாக படித்ததற்கு நன்றி!

நண்பன் ஸ்ரீஜி

No comments:

Post a Comment