All pass அவசியமா?
------------------
மனிதனின் வாழ்க்கை முழுவதும் தொடரும் செயலே கற்றல். இதுவரை 8ம் வகுப்புவரை கட்டாயத்தேர்ச்சி என்னும் நடைமுறை இருந்துவருகிறது.மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தால்போதும் அவர்களுக்கு தேர்ச்சியளிக்க வேண்டும். ஆனால் இப்போது மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத்துறை அளித்துள்ள 5ம் வகுப்பு வரை மட்டும் தேர்ச்சி என்னும் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மாணவர்களை பாதிக்கும் ஒரு விதியாகவே கருதவேண்டியுள்ளது.
கட்டாயத்தேர்ச்சி முறை ஏன் வந்தது?
இம்முறை வருவதற்கு முன்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அந்த வகுப்பிலேயே நிறுத்தப்பட்டு விடுவார்கள். இவ்வாறு 2, 3 வருடங்களாக ஒரே வகுப்பில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அப்படி தொடர்ச்சியாக ஒரே வகுப்பில் மாணவர்களை நிறுத்தி வைப்பதால் கல்வியின் மீது வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டு பள்ளியைவிட்டு இடைநிற்றலும், படிப்பை பாதியில் நிறுத்துவதும் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிக்கல்வியைக்கூட முழுமையாக நிறைவுசெய்யாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானது. தன் வயது மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்வதைப் பார்க்கும் தோல்வியடைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையோடு தங்கள் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டனர். இந்த இடைநிற்றலைக் குறைக்க வேண்டும், மாணவர்கள் குறைந்தது பள்ளிக்கல்வியை மட்டுமாவது நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காகவே 8ம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சிமுறை கொண்டுவரப்பட்டது.
இப்போது 5ம் வகுப்பு வரை மட்டும் கட்டாயத்தேர்ச்சி என்பது மீண்டும் பழையபடி பள்ளியை விட்டு இடைநிற்றலும் விலகலும் அதிகரிக்கவே வழிசெய்யும். கல்வி குறித்த விழிப்புணர்வும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் அடுத்தபடிநிலையாக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணியைச் செய்யாமல் 'வேதாளம் முருங்கைமரம் ஏறிய' கதையாக மீண்டும் 5ம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி என்பது கல்வித்துறையைப் பின்னோக்கி இழுக்கும் வேலையாகும். இது வருந்தத்தக்கது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.
நண்பன் ஸ்ரீஜி
No comments:
Post a Comment