Monday, 26 December 2016

All pass அவசியமா? -பதிவு 3

All pass அவசியமா? -பதிவு 3
--------------------------
மாணவர்களை ஃபெயிலாக்கினால் கல்வித்தரம் உயருமென்றால் உடனடித்தேர்வுகள் எதற்கு? 

கடந்த 3 வருடங்களாக வெளியான 10ம் வகுப்பு முடிவுகளை கவனித்தால் சுமார் 90%க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். மீதி 10%க்குக் குறைவான மாணவர்களே தோல்வி அடைகின்றனர். அவ்வாறு தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனடித்தேர்வுகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதே கல்வியாண்டில் +1 சேர்ந்து படிப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் +2விலும் பின்பற்றப்பட்டு தேர்ச்சிபெறும் மாணவர்கள் கல்லூரியில் உடனே சேர்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இதே நடைமுறை பள்ளி அளவில் 9, 11 வகுப்புகளுக்கும் கூட பின்பற்றப்படுகிறது. இவை அனைத்தும் எதற்காக?  அம்மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாகிவிடக்கூடாது என்பதற்காகத்தானே! 

கல்லூரிகளில் செமஸ்டர் முறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தோல்வியுற்றாலும் மாணவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அனுமதிக்கின்றனர். இறுதியாக நடைபெறும் செமஸ்டரில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால்கூட போதும் என்பது அனைவரும் அறிந்ததே. மிகச்சில படிப்புகளுக்கு மட்டுமே break semester என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது அந்த செமஸ்டரை முடித்தால் மட்டுமே அடுத்த வருடப்படிப்பைத் தொடரலாம்.

இவ்வாறு 9, 10, 11, 12 வகுப்புகளிலும்,  கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கே தேர்வில் தோல்வி என்பது அவர்களின் காலத்தையும், வாழ்க்கையையும் வீணாக்கிவிடக்கூடாது என உடனடித்தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும்போது 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேர்வில் தோல்வி என்பதும் அதற்காக அவர்களின் படிப்பை வருடக்கணக்கில் வீணாக்கலாம் என்பதும் எப்படி சரியான முடிவாக இருக்க முடியும்? நிச்சயம் 5ம் வகுப்பு வரை மட்டும் தேர்ச்சி என்பது சரியான முடிவு கிடையாது. கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டவில்லை என்றால் அதை சரிசெய்து ஓடச்செய்ய வேண்டும். மாறாக கடிகாரத்தை நிறுத்தி வைப்பதால் அது சரியாகிவிடுவதில்லை. ஏனெனில் கடிகாரத்தை நிறுத்தினால் காலம் நின்றுவிடப்போவதில்லை. காலம் அனைத்தையும் கற்றுத்தரும் மிகப்பெரும் ஆசான். பிள்ளைகள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளட்டும்,  அவர்களை சுதந்திரமாக விடுங்கள்.

முழுமையாக படித்ததற்கு நன்றி!
நண்பன் ஸ்ரீஜி

No comments:

Post a Comment