சட்டமன்றத் தேர்தல் வரலாறு
1989 எம்ஜிஆர் மறைவும் அதிமுக தோல்வியும்
தமிழக சட்டமன்றத்துக்கான 9வது தேர்தல் 1989ஆம் ஆண்டு நடந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடந்த இந்த தேர்தலில் அதிமுக உட்கட்சி பூசலால் இரண்டாக உடைந்தது; தோல்வி அடைந்தது.பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.வெகு நாட்களாக உடல்நலக்குறைவால் நலிவுற்றிருந்த எம்.ஜி.ஆர். 24.12.1987 அன்று மரணம் அடைந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். அவருடைய இறுதிச்சடங்குகள் முடிந்த பின் யார் முதல்வர் என்ற சர்ச்சை எழுந்தது.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டார். அச்சமயம், அதிமுகவில் மற்றொரு கோஷ்டியின் தலைவராக இருந்த ஜெயலலிதா இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள். சபாநாயகராக இருந்த “வானளாவிய அதிகாரப் புகழ்” பி.எச்.பாண்டியன் உட்பட 99பேர் ஜானகிக்கு ஆதரவு அளித்தவர்கள்.
சட்டமன்றத்தில் மோதல்
ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை சபாநாயகர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றினார். இதனால் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 191 ஆகக் குறைந்தது. 26.1.88 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்தைப் புறக்கணித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, அதிமுக கோஷ்டிகள் கடுமையாக மோதிக் கொண்டன. சபாநாயகர் அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா ஆதரவாளர்களை அவையில் இருந்து வெளியேற்றினார். சட்டமன்றத்தில் 111பேர் மட்டுமே இருந்தனர். இவர்களின் ஆதரவோடு ஜானகி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.சட்டமன்றத்தில் நிலவிய குழப்பம் வெளியிலும் நீடித்தது.
சட்டமன்றம் செயல்படுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. சட்டமன்றக் குழப்பங்களைக் காரணம்காட்டி, தமிழக சட்டமன்றத்தைக் கலைக்க ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கேற்ற வகையில் ஆளுநர் தயாரித்த அறிக்கையின் பேரில், தமிழக சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதிமுக இரண்டாகப் பிளந்தது. அதிமுக(ஜா),அதிமுக(ஜெ) ஆகிய இரு கோஷ்டிகளும் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற கடுமையாக முயன்றன. இதனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.அதிமுக ஜானகி கோஷ்டிக்கு இரட்டைபுறா சின்னமும், அதிமுக ஜெயலலிதா கோஷ்டிக்கு சேவல் சின்னமும் அளிக்கப்பட்டது.
காங்கிரசில் யாருடன் கூட்டு வைத்துக் கொள்வதில் கடும் மௌனம் நீடித்தது.1989 ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுகவில் எந்த கோஷ்டியுடன் உறவு வைத்துக்கொள்வது என்ற குழப்பம் காங்கிரசில் இருந்தது. இந்த முரண்பாட்டால் சிவாஜி கணேசன் அதில் இருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார்.
நான்கு முனைப் போட்டி
இந்நிலையில் நடந்த தேர்தலில் நான்குமுனை போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தனியாக நின்றது. தி.மு.க., சிபிஐ(எம்), ஜனதா தளம் ஆகியவை ஓரணியில் நின்றன.அதிமுக(ஜா), தமிழக முன்னேற்ற முன்னணி ஆகியவை கூட்டு வைத்துக் கொண்டன. அதிமுக(ஜெ),சிபிஐ இணைந்து போட்டியிட்டன. மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 232 தொகுதிகளுக்கு 21.1.89ல் தேர்தல் நடந்தது. திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக 150, சிபிஎம் 15, ஜனதா 4 தொகுதிகளில் வென்றன.
அதிமுக (ஜெ) 25 இடங்களில் வென்றது. சிபிஐ 3 இடங்களைப் பிடித்தது. அதிமுக(ஜா) இரண்டு இடங்களில் வென்றது. காங்கிரஸ் 26 இடங்களில் வென்றது.கருணாநிதி மூன்றாவது முறையாக முதல்வரானார். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. கருப்பையா மூப்பனார் எதிர்க்கட்சித் தலைவரானார். தள்ளிவைக்கப்பட்ட மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு மார்ச் 11 அன்று தேர்தல் நடந்தது.அதற்குள் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைந்து விட்டன. அதற்கு இரட்டை இலை சின்னம் அளிக்கப்பட்டது. இவ்விரு தொகுதிகளையும் அதிமுக வென்றது. சட்டமன்றத்தில் அதிமுகவின் எண்ணிக்கை இந்த வெற்றியுடன் 29 ஆக உயர்ந்தது.
No comments:
Post a Comment