Thursday 26 May 2016

கல்விமுறை

"படித்ததில் பிடித்தது."

புலிகளையெல்லாம்
கூட்டமாய் பிடித்து
பொதி சுமக்க வைக்கிறது!
இந்த கல்வி முறை.
சிங்கங்களை சிறையில் அடைத்து
சிட்டுக் குருவி மாதிரி
கத்தப் பழக்குகிறது!
பாக்கட் பால் சமூகத்திடம்
பசுமாட்டைப் பற்றி
கட்டுரை எழுதச் சொல்கிறது
இந்த கல்வி முறை.
படிப்பை திணிக்கும் பதற்றத்தில்
பிஞ்சுகளின் பட்டாம் பூச்சிக் கனவுகளில்
பெட்ரோல் ஊற்றி விடுகிறது!
தன்னம்பிக்கையற்ற
தக்கைகளை உருவாக்கி
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பார்சல் அனுப்புகிறது!
இந்த கல்வி முறை
எழுதப் படிக்கத் தெரிந்த
பாமரர்களுக்கு
பட்டை தீட்டி
வைரமென விற்கிறது.!
நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணைக் காட்டி
வருகிற பள்ளிகளின் விளம்பரம்
நூறு சதவிகித பிலேஸ்மான்ட்டைக் காட்டி
வருகிற கல்லுரி விளம்பரம்
எல்லாம்..
செக்கிழுக்க இங்கே எருதுகள் செய்து தரப்படும்
என்பதன் முகமூடிகள் தானே!
வகுப்பறை தாண்டி
வாசிக்காத சமூகம்!
பாட புத்தகம் தாண்டி
சிந்திக்காத சமூகம்!
வரலாறுகளை
வெறும் தேதிகளாய்..
பூகோளத்தை நாட்டின்
தலை நகரங்களாய் மட்டும்
மனப்பாடம் செய்த சமூகம்!
கேல்குலஸ் கணக்குகளை
எதற்குப் படித்தோம்
என்று-ஒரு
பொறியாளனே
புரிந்து கொள்ள முடியாத சமூகம்!
பத்து மார்க் கேள்விக்காக
பிக் பேங்கைப் படித்த சமூகம்!
கலித்தொகை தொடங்கி
கலிங்கத்து பரணி வரைக்கும்
ராபர்ட் ப்ராஸ்ட் தொடங்கி
வில்லியம் வேர்ட்ஸ்வர்த் வரைக்கும் படித்தாலும்
தப்பின்றிப் பேசத்
தடுமாறுகிற சமூகம்!
அடடா பட்டியலிட்டால்
அடங்காது இந்த கல்வி முறையின் சாதனைகள்.!
வெறும் வார்த்தகளால்
விளக்க முடியாத வேதனைகள்!

No comments:

Post a Comment